Showing posts with label IPL5. Show all posts
Showing posts with label IPL5. Show all posts

Friday, May 25, 2012

IPL5 -CSK vs MI -மும்பை F-16ஐ சுட்டு வீழ்த்திய தோனி”காப்டர்”

IPL5 -CSK vs MI -மும்பை F-16ஐ சுட்டு வீழ்த்திய தோனி”காப்டர்” 

சென்னை அணி, நேற்று பங்களூரில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியை ஜெயித்தது என்று சொல்லுவதை விட நசுக்கியது (அ) தரையிலிட்டு தேய்த்தது என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்! இதற்கு ஒரு காரணம், சென்னையின் Big match அனுபவமும் (3 ஐபிஎல்இறுதி ஆட்டங்கள், 1 செமிஃபைனல்) கூட! சென்னை அணி 4வது இடத்துக்கு ஓசியில் வந்தது என்று சொல்லுபவர்களுக்கு: பங்களூரும், ராஜஸ்தானும் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு, சென்னை என்ன பண்ணும்? அது போல, தர்மசாலாவில் நடந்த தில்லி-பஞ்சாப் ஆட்டத்தில், தில்லியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பஞ்சாபின் வெற்றிக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி என்பது உலகறிந்த விஷயம் தானே! மேலும், சென்னை ஒரு 17 பாயிண்டுகள் எடுத்து, அதோடு முக்கியமாக +VE NRR-ஐ வைத்திருந்ததால் தானே, பிளே ஆஃப்-இல் நுழைய முடிந்தது!

நேற்றைய ஆட்டத்தில், தோனியின் ஆட்டம் அட்டகாசம்! அவரது பரபரப்பின்மையே முக்கியமான சமயங்களில் அவரது பலம் என்பதை அவர் மீண்டும் நிருபீத்தார்! அதுவும் அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை, (அதுவும் மலிங்காவின் பந்து வீச்சில்) shot of the day, ஏன், shot of IPL-5 என்று தாராளமாகக் கூறலாம்! அந்த ஓவரில், மலிங்கா 2 பந்துகளை chuck பண்ணினார் என்பது கூடுதல் தகவல்! அவர் 4 ஓவர்களில் 41 ரன்களை தாரை வார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது! தனது இன்னிங்க்ஸில், சங்கர் படத்துக்கு இணையான பிரும்மாண்டம் கொண்ட 112 மீ சிக்ஸர் ஒன்றும் தோனி அடித்தார்.

தோனியின் 20 பந்துகள் 51 ரன்களும், பிரேவோவின் 14 பந்துகள் 33 ரன்களுமே, சென்னையின் மெகா ஸ்கோருக்கு (187) வழிவகுத்தன! அது போல, 1 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து மதிமயங்கி இருந்த சென்னையின் துயரகற்றி உய்ய வைத்த பெருமைக்குரியவர்கள், பத்ரியும், ஹஸ்ஸியும் ஆவர் :-) சென்னை முதல் 9 ஓவர்களில் எடுத்தது 47 ரன்கள் மட்டுமே! அடுத்த 4 ஓவர்களில் எடுத்ததும், 47 ரன்கள்!! தலைவர் தோனி, அண்ணல் பிரேவோ காஸ்மிக் நடனத்தின் முடிவில், அதாவது கடைசி 7 ஓவர்களில் சென்னை எடுத்தது, 93 ரன்கள்!

அதே நேரம், நல்ல திறமையிருந்தும், தொடர்ந்து சொதப்பும், முரளி விஜயையும், ரைனாவையும் பார்த்து மகா எரிச்சலாக இருந்தது! பிரேவோ, பந்து வீச்சிலும் நேற்று மிளிர்ந்தார். 3-0-10-2. அதுவும், போலார்ட் அவுட்டானவுடன், பிளேன் பிடித்து உடனே ஊருக்குச் செல்லுமாறு பிரேவோ அறிவுரை வழங்கி, அவருக்கு “பை பை” சொன்னது கண் கொள்ளா காட்சி ;-) ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ரொம்ப disappointing! இந்திய ஆடுகளங்களில் அவர் ஷார்ட்டாக பந்து வீசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்! Some of his deliveries were standing up, begging to be hit !!! ஹில்ஃபன்ஹாஸ் அடுத்த ஆட்டத்தில், தனது அனுபவத்தையும்,  திறமையையும் முழுவதுமாக நீரூபிப்பார் என்று நம்புகிறேன்!

டுபிளஸ்ஸிக்கு பதில் ஹஸ்ஸியை அணியில் தக்க வைத்துக் கொண்டது நல்ல விஷயமே! சென்னை1-2 என்ற நிலையில் இருந்தபோது, அவரது அனுபவம் மிக்க பயனுள்ளதாக அமைந்தது! இதை hind sight-ல் தான் கூறுகிறேன் என்றாலும், அது தான் உண்மை!!!! இதற்கு தோனியை பாராட்ட வேண்டும்! அஷ்வின் எதிர்பார்த்தது போல சிறப்பாக பந்து வீசினார். ஆனால், அவரை விட பவர் பிளே ஓவர்களில் தைரியமாக, மிகத் திறமையாக பந்து வீசிய ஜகதியை எத்தனை பாராட்டினாலும் தகும்! அதுவும், ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ஸ்மித்தால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கடினமான சூழலில்!

என்னைப் பொருத்தவரை, அவரது ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸுக்காக, பிரேவோவுக்குத் தான் (தோனிக்கு தரப்பட்ட) ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்! எனது முந்தைய (இட்லிவடை வலைப்பதிவில் இட்ட) ஐபிஎல் இடுகையில், சென்னை ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் உதவாத வகையில் சற்றே சீர் செய்ய வேண்டும் என்று கூறியதை சற்று மாற்றிச் சொல்கிறேன்! நாளைக்கு சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாகவும், ஞாயிறன்று, சற்றே பசுமையான ஆடுகளமாகவும் அமைத்தல் அவசியம் :-)

என்னடா, மும்பை பேட்டிங் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நினைப்பவர்களுக்கு: அந்த உதவாக்கரைகள் பேட்டிங் குறித்து எழுத ஒரு எழவும் இல்லை! அச்சுபிச்சு போல இருக்கும் அம்பானியின் திருமகன் ஒரு பெரிய சோபாவில் தனியாக அமர்ந்திருந்ததை டிவியில் காட்டினார்கள்! மும்பை எப்போதும் போல முக்கியமான ஆட்டங்களில் CHOKE-இ விடும் என்று தெரிந்தோ என்னவோ, நிடா அம்பானி பங்களுர் பக்கம் தலைகாட்டவில்லையோ? எல்லாவற்றையும் விட, ஆட்டம் முடிந்த பிறகு, பேட்டி என்ற பெயரில் டேனி மாரிஸன் பிரசித்தி பெற்ற ஐபிஎல் குட்டிகள் ஷிபாங்கி மற்றும் அர்ச்சனா விஜயாவுடன் அடித்த லூட்டி தான் நேற்றைய ஹைலைட் ;-)

இப்படியாக, சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) Mumbai Choker Indians (MCI) அணியை (எதிர்பார்த்தது போல) முக்கியமான எலிமினேட்டர் ஆட்டத்தில் வென்றது! MCI அணி சென்னையை 2 குரூப் ஆட்டங்களிலும் ஜெயித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால், என்ன பிரயோஜனம்? இப்போதிலிருந்து, சென்னைக்கு 1 match at a time & 2 to go, இரண்டும் நம்மூர் சேப்பாக்கத்தில்! நம்பிக்கையே வாழ்க்கையின் உயிர்நாடி :-)

எ.அ.பாலா

Saturday, May 12, 2012

IPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ராயல் வெற்றி

IPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ராயல் வெற்றி


தோனி டாஸில் ஜெயித்தது நல்லதாக போயிற்று. அதனால் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை, 2-3 முறை மழை பெய்து கழுத்தறுத்ததில், விக்கெட்டுகளை இழந்து, 9 ஓவர்களில் 43-3 என்று பரிதாபமான நிலையில் இருந்தது. சென்னையின் பந்து தடுப்பிலும், பந்து வீச்சிலும் ஒரு purpose தெரிந்தது! ஹில்ஃபன்ஹாஸையும் யோ மகேஷையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். என்ன தான், மழை மற்றும் பிட்ச் காரணமாக பந்து வீச்சுக்கு ஆதரவு இருந்தாலும், அவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்து வீசினர்.

ஹில்ஃபன்ஹாஸ், field restriction இருந்த முதல் 6 ஓவர்களில், அதுவும் மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்தை தள்ளி வைத்து விட்டு, தொடர்ச்சியாக 4 ஓவர்கள் வீசி, 8 ரன்களே கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே, சென்னைக்கு நல்லதொரு தொடக்கத்துக்கு வழி வகுத்தது! மகேஷ் 4-0-21-2. பிரேவோ ரன்களை சற்றே வழிய விட்டதால் (3 ஓவர்கள், 38 ரன்கள்), ராஜஸ்தான் 126 ரன்கள் எடுத்தது, நான் 110 தான் தேறும் என்று எண்ணினேன்.

மிகவும் சுலபமாக சென்னை ஜெயித்து விடும் என்று எப்போதும் போல நம்பினேன் :) முதல் வாட்சன் ஓவரிலேயே முரளி விஜய் முட்டை-அவுட் ஆனார். டைட் தனது பந்து வீச்சில் 150 கிமீ வேகத்தை சர்வசகஜமாகத் தொட்டார்! 6-வது ஒவரில், 23 ரன்கள் எடுத்து, நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரைனாவும் காலி. 2-டவுன் பிரேவோ களமிறங்கினார். (ச)செம்மையாகத் தடவினார்! 12வது ஓவரில், அவரது நரக வேதனை முடிவுக்கு வந்தது! 60-3, RRR 8.4.

ஹஸ்ஸியை ரன் அவுட் ஆக்கியதோடு இல்லாமல், தானும் ரன் எடுக்க எந்த முயற்சியும் எடுக்கத் தயங்கிய தோனியின் தயவால், ராஜஸ்தான் பக்கம் ஆட்டம் மொத்தமாகத் திரும்பியது. ஜடேஜா பந்தை அடிக்க முயற்சியாவது செய்தார். திருவாளர் கேப்டன் தோனி, திரிவேதியின் 110 கிமீ பந்துகளை, க்ரீஸுக்குள் இருந்தபடியே, நடனமாடி கஷ்டப்பட்டு தடுத்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. யாராவது அவரை தடுத்தாட்கொண்டால் நல்லது என்று தோன்றியது ;) இப்படி சொதப்பி, 16வது ஓவரில் தோனி (10, 16 பந்துகளில்) வீழ்ந்தபோது, ஸ்கோர் 80-5, தேவையான ரன்ரேட் 11.8 !!!

உடனடியாக ஜடேஜாவும் அவுட்! இரு புது மட்டையாளர்கள் களத்தில், மார்க்கல், அனிருத்தா. இவர்களை Nothing to Lose என்ற நிலைக்கு (22 பந்துகளில் 43 ரன்கள்) தள்ளியதற்காவது தோனியை பாராட்டியே தீர வேண்டும்!!! அப்புறம் நடந்தது தான் எல்லாருக்கும் தெரியுமே :-) பங்கஜ், வாட்சன், டைட் என்று எல்லாருமே ஒரு வாங்கு வாங்கப்பட்டதில், 18.1 ஓவர்களிலேயே, சென்னைக்கு ஒரு நம்பமுடியாத வெற்றி! அதுவும், டைட்டின் பந்தில் அனிருத்தா அடித்த சிக்ஸர் கண்ணிலேயே நிற்கிறது! சென்னை தோற்கவே கூடாத ஆட்டத்தில் தோற்றும், ஜெயிக்கவே முடியாத ஆட்டத்தை ஜெயித்தும், இந்த IPL-இல் அடிக்கும் கூத்தை என்னவென்று சொல்ல :)

சில குறிப்புகள்: இந்த IPL-இல் சென்னை பேட்டிங் பல ஆட்டங்களில் சொதப்பலாக இருந்தது என்பதை தோனியே ஆட்ட முடிவு பேட்டியில் ஒப்புக்கொண்டார். இந்த லட்சணத்தில் ஆடினால், அடுத்த சுற்றுக்கு சென்னை தேறினாலும், கோப்பையை வெல்வது மிக மிக கடினம். பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றியதில், ஸ்திரத்தன்மை போய் விட்டது! தலைவர் தோனி ஃபார்மில் இல்லாததால், அவர் 2 அல்லது 3-டவுன் வருவதில் எந்த பயனும் இல்லை என்பது தெளிவு! அதனால், ரெய்னா, ஜடேஜா, பிரேவோவுக்குப் பின் அவர் வருவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது!

இனி வரும் 3 குரூப் ஆட்டங்களில், ஜடேஜா பேட்டிங் ஃபார்முக்கு / அவருக்கு பொறுப்பு வருவதற்கும் இது வழி வகுக்கும்! அதுவும் இலக்கைத் துரத்தும்போது, இது இன்னும் முக்கியமாகிறது! தோனி, தொடர்ந்து 10 to 15 ஓவர்களில் செய்யும் சொதப்பலால், RRR கண்டபடி எகிறி, அடுத்து வரும் பேட்ஸ்மன்களுக்கு அனாவசிய அழுத்தம் ஏற்படுகிறது! அது போல, சென்னை முதலில் பேட் செய்யும் ஆட்டங்களிலாவது, ஒரு 5-6 ஓவர்கள் இருக்கும் சூழலில், மார்க்கல் களமிறங்குவது மிக அவசியம்!

2-3 வருடங்களாக, தொடர்ந்து, ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை ரசிகர்களை இருக்கை நுனிக்கு இட்டு வந்து டென்ஷன் கொடுப்பதை ஒரு கலைவடிவமாகவே சென்னை அணி ஆக்கி விட்டது :) பலம் வாய்ந்த தில்லி அணியும், கெய்லையும், டிவிலியர்ஸையும் (மட்டுமே) நம்பியிருக்கும் டுபாக்கூர் பங்களூர் அணியும், பல ஆட்டங்களை ஓசியில் ஜெயித்த, உருப்படாத மும்பை அணியும் அதை விட உருப்படாத கொல்கத்தா அணியும் ஐபிஎல் கோப்பையை அண்டாத அளவுக்கு சென்னை அணி பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், டிவிட்டரில் உலவும் @elavasam @njganesh போன்ற சென்னை அணி ரசிகர்கள் இந்த டென்ஷனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள் :-) நான் சென்னை ரசிகன் கிடையாது!

காரணம்: எனக்கு ”சென்னை வெறியன்” சாரி, வெறியர் என்ற பட்டத்தை மிக்க அன்போடு டிவிட்டரில் வழங்கிய நண்பர் @njganesh -க்கு நன்றி :)




Saturday, May 05, 2012

IPL5 - RCB vs KXIP - இதல்லவோ டி-20 ஆட்டம்!

IPL5 - RCB vs KXIP - இதல்லவோ டி-20 ஆட்டம்! - எ.அ.பாலா



நேற்று சின்னசாமி அரங்கில் சில நம்ப முடியாத விஷயங்கள் நடந்தன! டாஸில் வென்ற டேவிட் ஹஸ்ஸி அதற்கு முந்தைய நாள் பெய்த மழை காரணமாக முதலில் பந்து வீச முடிவு செய்தது, சரியான தேர்வு என்று தான் சொல்ல வேண்டும். பங்களூர் அணி தொடக்கத்திலேயே அடிதடிக்கு அஞ்சாத அகர்வாலை இழந்தது. இதுவரை நடந்த ஆட்டங்களில் ”நிறத்துக்கப்பால்” காணப்பட்ட பிரவீன் குமாரின் பந்து வீச்சை விவரிக்க/வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!!! 4-0-8-0.

கெய்ல், விராத் கோலிக்கு எதிராக இத்தகைய பந்து வீச்சை அதி அற்புதம் என்று தான் கூறுவேன்! அவர் பந்து வீச்சில், பந்து காற்றிலும், பிட்ச் ஆனபின்னும், ஒரு குடிகாரனைப் போல நிலை தடுமாறியதில், கெய்ல் என்ற புலி எலியானது, சற்றே ஃபார்மில் இல்லாத கோலி சுண்டெலியானது ;-) 9 ஓவர்களில் பங்களுர் எடுத்தது 48 ரன்கள் மட்டுமே.



அடுத்து பந்து வீச வந்த சவ்லாவையும், அவானாவையும் எதிர்த்து, கெய்ல் கோர தாண்டவம் ஆடியபோதும், ஆசார் மெஹ்மூதின் பந்து வீச்சில் அவரது டி20 அனுபவம் மிளிர்ந்தது. 16வது ஓவரில் மெஹ்மூத் கெய்லை (71, 42 பந்துகளில்) வீழ்த்தினார். அடுத்த ஓவரில் கோலியும் காலி. 17 ஓவர்களில் ஸ்கோர் 135-3. மெஹ்மூத் தான் வீசிய 20வது ஓவரில், டிவிலியர்ஸ், மெக்டொனால்ட் விக்கெட்டுகளை சாய்த்து, நான்கே ரன்கள் கொடுத்து தனது அருமையான ஸ்பெல்லை (4-0-20-3) பூர்த்தி செய்தார்! பங்களூர் மொத்தம் 158 ரன்கள்.

பஞ்சாபின் துரத்தல் சுறுசுறுப்பாகத் தொடங்கியது. மந்தீப் சிங், சாகீர் கானை ஒரு கிளப் பந்து வீச்சாளரரைப் போல அணுகியதில், மார்ஷ் விக்கெட்டிழந்தும், ஸ்கோர் 8 ஓவர்களில் 70/1 என்று பஞ்சாப் ஆரோக்கியமான நிலையில் இருந்தது! அப்பண்ணா வீசிய 9வது ஓவரில் மந்தீப் அவுட். களமிறங்கிய கேப்டன் ஹஸ்ஸி, அப்பண்ணா வீசிய 13வது ஓவரிலும், பதான் வீசிய 16வது ஓவரிலும் செய்த துவம்சம் காரணமாக, பஞ்சாப் ஸ்கோர் 146-2. ஹஸ்ஸி 41 ரன்கள், 22 பந்துகளில் !!!

4 ஓவர்களில் 13 ரன்களே தேவை (8 விக்கெட்டுகள் கையில்) என்று தோற்கவே முடியாத நிலையில் இருந்தபோது, ’தோற்றே தீருவோம்’ என்று பஞ்சாப் பிரம்ம பிரயத்தனத்தில் இறங்கி, Harakiri செய்யவிருப்பதை அறியாத நான், சில மணித்துளிகள் வேறு சேனலுக்குத் தாவி மீண்டும் திரும்பி வந்து பார்த்தால், சைனியும், மஹ்மூத்தும் அவுட்டாகி, ஸ்கோர் 151-4. 14 பந்துகளில் 8 ரன்கள் என்பது ஹஸ்ஸி இருக்கையில் எளிது என்றபோதும், சின்னசாமியே ஏனோ டென்ஷனில் இருந்த மாதிரி தோன்றியது என் பிரமையா என்று தெரியவில்லை :-)

சாகீர் வீசிய அருமையான 19வது ஓவரில், 2 ரன் அவுட் (ஹஸ்ஸி, நய்யார்), 2 ரன்கள் மட்டுமே! அதாவது, 17,18,19-வது ஓவர்களில் பஞ்சாப் எடுத்தது 8 ரன்கள், இழந்தது 4 விக்கெட்டுகள், அதில் 3 ரன் அவுட் !!!! இந்த நம்ப முடியாத மகா கூத்துக்கு ஒரே காரணம், மர்ஃபியின் II Law of Thermodynamics --- Things get Worse under Pressure ;-) இறுதி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 2 dot பந்துகள், 3வதில் 2 ரன்கள், நாலாவதில் 1 ரன். இப்போது 2 of 2 தேவை. நிற்க!

பெங்களுர் ஜெயிப்பது, சென்னையின் அடுத்த சுற்று தகுதி வாய்ப்புக்கு நல்லதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ப்ரீதி ஜிந்தாவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த டென்ஷனைப் பார்த்து மனம் கலங்கியே, பஞ்சாப் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டி விரும்பினேன் என்ற உண்மையை (இதை ஏதாவது ஒரு அனானி நண்பர் கண்டுபிடித்து கமெண்ட் போடுவதற்குள்) நானே சொல்லி விடுவது உத்தமம் ;-) அந்த 5வது பந்தை பியுஷ் சாவ்லா கூலாக சிக்ஸர் அடித்து, ப்ரீதியை டென்ஷனிலிருந்து விடுவித்தார்!

இது போன்ற “நகம் கடி” ஆட்டங்களை வைத்துப் பார்க்கும்போது டி-20 கிரிக்கெட்டுக்கு சூரியனைப் போன்ற பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பது எள்ளளவும் சந்தேகமில்லை! பின்னர் ப்ரீதியை பேட்டி எடுத்தபோது, இறுதி ஓவரில் தனக்கு இதயமே நின்று விடுவது போல உணர்ந்ததாக சந்தோஷமாகவே கூறினார்! ஆக, பஞ்சாப் அடிக்கடி ஜெயித்து, ப்ரீதி ஜிந்தா போன்ற மெல்லிய இதயம் படைத்தவர்கள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருப்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தானே! என்ன நான் சொல்றது :-)

Glossary:
நகம் கடி - NAIL BITING
நிறத்துக்கப்பால் - OFF COLOUR

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை


கடந்த ஒரு 4-5 IPL ஆட்டங்களை ஏனோ பார்க்கவில்லை! இம்முறை Mr.Cricket மைக்கேல் ஹஸ்ஸி சென்னை அணியில் இருந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் டிவி முன் உட்கார்ந்தேன். (என் நல்ல காலம், டிக்கெட் இருந்தும், சேப்பாக்கத்துக்கு செல்லவில்லை!) ஆட்டத்தில் ஜெயிக்கிறாரோ இல்லையோ, டாஸில் தோனி ஜெயித்து விடுகிறார்! சென்னை முதல் பேட்டிங் செய்தது.

டுபிளஸ்ஸி 2வது ஓவரிலேயே லீ பந்து வீச்சில் காலி. 5வது ஓவரில் ஹஸ்ஸி தன்னைத் தானே ரன் அவுட் ஆக்கிக் கொண்டார்! ரைனா நன்றாக ஆடிக்கொண்டிருந்தது சற்று ஆறுதல். 10 ஓவர்களில் 74-2, ஆடுகளத்தின் தன்மையை (பந்து பிட்ச் ஆனவுடன், பந்தின் வேகம் கணிசமாக குறைந்து விடுவதை) வைத்து பார்க்கும்போது, இதை நல்ல நிலைமை என்று தான் கொள்ள வேண்டும்! 155-160 ரன்கள் எடுத்து விட்டால், கொல்கத்தாவுக்கு ஆப்பு உறுதி என்றும் தோன்றியது!


பிரேவோவும் ரைனாவும் சீக்கிரமே விக்கெட் இழந்தார்கள். தோனியும், மில்லியன் டாலர் பேபி ஜடேஜாவும் சோபிக்கவில்லை. நரைனின் அருமையான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பயங்கரமாகத் தடவினார்கள். 17 ஓவர்களில் 113/4. 140 கூட தேறாது என்று புரிந்தது. பிரேவோ, அஷ்வின் தவிர்த்து நம்மிடம் இருக்கும் பந்து வீச்சை வைத்துக் கொண்டு 140-ஐ defend பண்ணுவது கடினம் என்றும் புரிந்தது. சென்னையின் மரண வேதனையின் முடிவில் மொத்த ஸ்கோர் 139!

இம்மாதிரி ஆடுகளத்தில் திறமையும், நிதானமும் உள்ள மட்டையாளர்கள் மட்டுமே பரிமளிப்பார்கள் என்பதற்கு கம்பீரும், காலிஸும் சிறந்த உதாரணங்கள். மெக்கல்லம் 3வது ஓவரிலேயே அவுட்டான பின், இருவரும் ஜோடி சேர்ந்ததில், 12 ஓவர்களில் 82-1. காலிஸ் அவுட்டான பிறகும், கம்பீர் RRR 8-க்கு மேல் போகாமல் பார்த்துக் கொண்டார். திவாரியும், கம்பீரும், பதானும், 18, 19 மற்றும் 20வது ஓவர்களில் விக்கெட்டிழந்து, Climax-இல் சற்றே சுவாரசியம் கூடியபோதும், சென்னைக்கு Anit-climax ஆக ஆட்டம் முடிந்தது. சேப்பாக்கம் என்ற CSK-யின் கோட்டை மதிள்சுவரில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்திருப்பதால், சென்னை ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது அவர்கள் உடம்புக்கு நல்லது :-)

இத்தனை "பெத்த" பேரு மட்டையாளர்களை வைத்துக் கொண்டு (டுபிளஸ்ஸி, ஹஸ்ஸி, தோனி, ரைனா, ஜடேஜா, பிரேவோ, மார்க்கல், பத்ரி) 139 ரன்கள் எடுத்த ஒரு லாயக்கில்லாத அணி தோற்றது நியாயம் என்று தான் நினைக்கிறேன்! அதோடு, மார்க்கல் போன்ற பலம் வாய்ந்த hitter-களுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும், கடைசியில் 8-10 பந்துகள் ஆடக் கிடைத்தால், அவர் தான் என்ன செய்ய முடியும்?
இந்த IPLலில் (மொத்தம் 8 ஆட்டங்களில், மும்பைக்கு எதிரான ஆட்டம் தவிர்த்து) அவருக்கு ஆடக் கிடைத்த வாய்ப்பு 7-8 ஓவர்கள் தான். இதில் என்னத்தை கிழிக்க முடியும்! அது போலவே, ரைனா கடந்த இரு IPL-கள் போல இந்த IPL-லில் பிரகாசிக்காதது சென்னையின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

தோனியும், பயிற்சியாளர் ஃபிளெமிங்கும், பிற பயிற்சியாளர்களும், திறமையான வீரர்கள் கொண்ட காம்பினேஷன் இருந்தும் சென்னையின் தொடர் தோல்விகளுக்கான காரணங்களை அலசி, புது திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அது போலவே, என்னைப்போன்ற சென்னை ரசிகர்கள், கேல்குலேடரை கையில் வைத்துக் கொண்டும், Spreadsheet அனாலிஸிஸ் செய்தும், எத்தனை ரன் வித்தியாசத்தில், எவன் ஜெயித்து எவன் தோற்பதால், எந்த ஆட்டத்தில் மழை பெய்வதால், சென்னை அணி (எப்படியாவது) அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யத் தயாராக வேண்டும் ;-)

சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) தங்கள் பெயரை "சென்னை சப்பைக் கம்மனாட்டிகள்" என்று மாற்றிக் கொள்ளலாம்! இந்த இடுகையில், யாரையும் திட்டக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், "முடியல", மன்னிக்கவும்!

எ.அ.பாலா

Friday, April 20, 2012

IPL5 -RCB vs PW -பங்களூர் கண்ட எழுச்சி!

நேற்று சின்னசாமி அரங்கில் நடந்த ஆட்டத்தில், டாஸை வென்ற தாதா முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார்! (கெய்லின் கொலவெறிக்கு தொடக்கத்திலேயே வாய்ப்பு தர வேண்டாம் என்ற எண்ணமோ என்னவோ :)) ரைடர்-ராபின் உத்தப்பா களமிறங்கினர். உத்தப்பா இம்முறை ’ஊத்தப்பா’ போல சொதப்பாமல், ராபின்(ஹுட்) போல பரிமளித்தார்! இந்த நேரத்தில் உங்களுக்கு, மும்பையின் பல கோச்களில் ஒருவரான ராபின் சிங் நினைவுக்கு வரவே கூடாது!

5 நாள் டெஸ்ட் ஆடும் அணிகளுக்குக் கூட ஒன்றிரண்டு பயிற்சியாளர்கள் தான். ஆனால், இந்த 40 ஓவர் ஐபிஎல் கூத்துக்கு, ஒவ்வொரு அணிக்கும், பேட்டிங் கோச், ஃபீல்டிங் கோச், போலிங் கோச், ரன்னிங் கோச், ஜாகிங் கோச் ... என்று நவஜீவன் எக்ஸ்பிரஸ் போல இத்தனை கோச்களும் கம்ப்யூட்டர் அனலிஸ்ட், உடற்பயிற்சியாளர், உளவியல் வல்லுனர் என்று உதிரிகளும் ஏன் என்று புரியவில்லை! ஆனால், அதே நேரம், சியர் லீடர்ஸ் அவசியம் என்பது மிகத்தெளிவாகப் புரிகிறது!

அதோடு, ஐபிஎல்-இல் பணத்தை தண்ணி போல இறைத்து, கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நம் மக்களுக்கு அப்பைத்தியம் துளியும் தெளியாமல் பார்த்துக் கொள்ளும் BCCI-இன் கெட்டிக்காரத்தனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! போட்ட துட்டை விட பல மடங்கு அள்ளி விடுகிறார்கள் என்பது வேறு விஷயம். இது BCCI-இன் நிர்வாகிகள் (ஓசியில்) ராஜ வாழ்க்கை வாழ்வதற்கு வழி வகுக்கிறது! இருட்டுச்சந்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அனானி “அகங்காரம் பிடித்த பாலா, கிரிக்கெட் ரசிகர்களை பைத்தியம் என்கிறார்” என்று கூக்குரல் இடுவதற்கு முன் ஒரு விஷயம் :) நான் சொன்ன அந்த கிரிக்கெட் பைத்திய பட்டியலில் முதல் ஆள் அடியேன் தான் என்று கூறி விடுகிறேன்!

சரி, ஆட்டத்துக்கு வருகிறேன்! 7 ஓவர்கள் முடிவில், ரைடர் அவுட், புனே 63-1 என்று நல்லதொரு தொடக்கம். உத்தப்பா ஆட்டம் இன்னும் சூடு பிடித்ததில், அவர் (69 of 45) அவுட்டானபோது, ஸ்கோர் 117-3 (13 ஓவர்களில்) என்று புனே வலுவான நிலையில் இருந்தது. ஸ்மித் அவ்வளவு பிரகாசிக்கவில்லையெனினும், சாமுவேல்ஸ் ஒரு வாங்கு வாங்கியதில் (34 of 20), புனே 182 ரன்கள் என்ற இலக்கை அடைந்தது.

கெய்ல், தில்ஷன் களமிறங்கியும், பங்களூரின் தொடக்கம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை! 10 ஓவர்கள் முடிவில், பங்களுர் 63-2. கெய்ல் அதிரடி எதுவும் இல்லை! ஆனால், அவர் (35 of 30) ஆட்டமிழக்காமல் இருந்தது பங்களூருக்கு ஆறுதலான விஷயம்! 12வது ஓவரில் கோலி அவுட்!!! தேவையான ரன்ரேட் 13.4 என்று RCB ரசிகர்களின் வயிற்றைக் கலக்கியது. Enough is enough என்று முடிவு செய்தது போல, கெய்ல், புனேவின் பெஸ்ட் பந்து வீச்சாளர் ராகுல் சர்மாவை தனது வதத்துக்கு இலக்காக தேர்ந்தெடுத்து, 13வது ஓவரில் செய்த துவசம்சத்தில் 5 சிக்ஸர்கள், அந்த ஓவரில் 31 ரன்கள்.

கெய்ல் பார்க்கத் தான் நெடுநெடுவென்று புஜபராக்கிரம காட்டான் மாதிரி தெரிகிறார்! ஆனால், அந்த 5 சிக்ஸர்களும் டைமிங்கோடு கூடிய அருமையான cricketing shots. கெய்ல் ஆடும்போது நேர் அம்பயர் ஹெல்மட் அணிந்து கொள்ளுதல் நலம் என்று எனக்குத் தோன்றியது! கெய்லின் இந்த விளாசல் காரணமாக, 6.3 என்ற ரன்ரேட் ஒரே ஓவரில், 8.3க்கு சென்றது. RRR 10.85

நல்ல பந்து வீச்சு காரணமாக ஆட்டம் மீண்டும் மெல்ல புனே பக்கம் சாயத் தொடங்கியது. 16வது நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து, அடுத்த யார்க்கர் பந்தில் கெய்லின் அருமையான இன்னிங்க்ஸ் (81 of 48) முடிவுக்கு வந்தது. RRR 13.8

சௌரப் திவாரி தடவிக் கொண்டிருந்தார்! டிவிலியர்ஸ் களமிறங்கினார். டிவிலியர்ஸ் மாத்யூஸ் வீசிய 18வது ஓவரில் (reverse switch hit) சிக்ஸர் அடித்தார்! பிரமாதமான Improvisation, Shot of the Day! சுத்தமாக பேலன்ஸ் இல்லாத நிலையில், டிவிலியர்ஸ் அத்தனை பலத்தை பிரயோகித்ததைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது!! திவாரிக்கும் ரோஷம் வந்து, அவரும் ஒரு சிக்ஸ் :)

இதற்கு நடுவில், மைதானத்தில், புலியைப் (சிவமணி) பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, ஒரு ஜில்பா தலையர் டிரம்ஸ் தட்டிக் கொண்டிருந்தது நல்ல நகைச்சுவை காட்சி ;-) கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவை. டிண்டாவின் அந்த அற்புதமான ஓவர் ஒரு anti climax. 7 ரன்கள் மட்டுமே கொடுத்து, கடைசி ஓவர் வீச இருந்த அனுபவமிக்க நெஹ்ராவுக்கு 21 ரன்கள் மிச்சப்படுத்தினார். புனே வெற்றி என்று உறுதியாக நம்பினேன்!

ஆனல், டிவிலியர்ஸ் வேறு திட்டம் வைத்திருந்தது எனக்குத் தெரியாமல் போய் விட்டது :-) அவரது improvisation திறமையையும், Never say Die attitude-ஐயும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடைசி 4 பந்துகளில் 16 தேவை என்ற நிலையில், 2 low full toss பந்துகளை சிக்ஸர்கள் அடித்து, சமன்பாட்டை 2 பந்துகளில் 4 ரன்கள் என்று ஆக்கினார். 5வதில் ஒரு ரன் மட்டுமே. டிவிலியர்ஸ் காரணமாக ஏற்கனவே ரோஷம் பொங்கிய நிலையில் இருந்த திவாரி, கடைசிப்பந்தை பவுண்டரிக்கு வெளியே அனுப்பியதில், RCBக்கு ஒரு famous WIN.

உடனே, வானம் பொத்துக் கொண்டு மழை கொட்டியது, வானத்து இமையவர் வாழ்த்து போல அமைந்தது! அத்துடன், சென்னைக்கு எதிராக கோலி வீசிய அந்த 28 ரன் ஓவர் மூலம் RCBக்கு பிடித்த சனி, இந்த அற்புதமான வெற்றி மூலம் விலகியது என்றும் கூறலாம் ;-) இப்படியாக, ஆட்டத்தில் 38 ஓவர்கள் (கெய்ல் 5 சிக்ஸர்கள் அடித்த ஓவரையும், கடைசி ஓவரையும் தவிர்த்து) பின் தங்கியிருந்த பங்களூர் அணி, ஒரு பிரமாதமான வெற்றியை பெற்றது!!!!!

எ.அ.பாலா

Monday, April 16, 2012

IPL5 -RCB vs RR -போலி ராயலை வீழ்த்திய நிஜ ராயல்கள்!




பெங்களூர் அணி மூன்றில் 2 ஆட்டங்கள் தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ராஜஸ்தான் அணி, முதலில் பேட் செய்து, சகீர், முரளி மற்றும் வெட்டோரி என்ற 3 Veteran-களின் அனுபவத்திறமை வாய்ந்த பந்து வீச்சின் காரணமாக, 13 ஓவர்களின் முடிவில், 82-1 (டிராவிட் விக்கெட் இழப்பு) என்ற மிகச் சாதாரண நிலையில் இருந்தது! ரஹானேயும், ஷாவும் ஆடிக்கொண்டிருந்தனர்.

சகீர் 3-1-10-0
முரளி 3-0-18-0
வெட்டோரி 3-0-14-1


14வது ஓவரில், ரஹானேவுக்கு கொலவெறி பிடித்து, அரவிந்தின் மிக சராசரி பந்து வீச்சில், 6 பவுண்டரிகள் விளாசினார். இதில் ஒன்று கூட காட்டுத்தனமான ஷாட் கிடையாது! ஒரே ஓவரில் ரன்ரேட் 6.3லிருந்து 7.6க்கு எகிறியது :-) 16, 17 மற்றும் 18வது ஓவர்களில், ஷாவும் ரஹானேவுடன் சேர்ந்து கொண்டு கெய்ல், வினய், முரளி பந்துவீச்சை துவம்சம் செய்ததில், சின்னசாமி அரங்கில் ரன் மழை பெய்தது! இந்த 3 ஓவர்களில் 62 ரன்கள்! அரங்கில் பல RCB ரசிகர்கள் மூர்ச்சை அடைந்த நிலைக்கு சென்று விட்டனர் :-)

இந்த ரணகளத்திலும், 19வது ஓவரை சகீர் மிகச் சிறப்பாக வீசினார். 4 உதிரிகளை தவிர்த்து, அவர் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 20வது ஓவரில் ரஹானே தனது சதத்தை (58 பந்துகள்) பூர்த்தி செய்தார். இதை ஐபிஎல் ஆட்டங்களின் மிக நேர்த்தியான சதம் என்று கூறுவேன். சின்னசாமியில் புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது. இறுதி 7 ஓவர்களில் ராஜஸ்தான் எடுத்தது 113 ரன்கள் (பிரதி ஓவர்: 16.1) !!!!!!!!! ராஜஸ்தான் மொத்த ஸ்கோர் 195.

கோலி, ரஹானே இருவருமே திறமைசாலிகளாக இருப்பினும், Temperament-ஐ பொறுத்த அளவில், ரஹானே பெட்டர் என்று தாராளமாக கூறலாம். ஜடேஜா, முரளிவிஜய் போன்றவர்கள் ரஹானேவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!

பெங்களூர் அணியிடம் பலமான பேட்டிங் (கெய்ல், அகர்வால், கோலி, டிவிலியர்ஸ்..) இருப்பதால், “துரத்தல்” சுவாரசியமாக இருக்கும் என்று எல்லாரையும் போல நானும் நம்பினேன்! 4 ஓவர்களில், பெங்களூர் 38-0. அகர்வால் 30, கெய்ல் -8 !!! பங்கஜ் சிங் வீசிய 5 ஓவரில் துரத்தல் சற்றே தடம் புரண்டது. அகர்வால், கெய்ல் இருவரும் வீழ்ந்தனர். ஸ்கோர் 42-2. கோலி, டிவிலியர்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர். 8 ஓவர்களில் 63-2.

9வது ஓவரில், மொகிந்தர் அமர்நாத் ஸ்டைல் “பொய்” பந்துவீச்சு எக்ஸ்பர்ட் சித்தார்த் த்ரிவேதியின் 107 கிமீ வேகப்பந்தை டிவிலியர்ஸ் ஸ்டம்ப்பில் இழுத்து விட்டுக் கொண்டார்! தனது அடுத்த ஓவரில் (11வது) த்ரிவேதியின் மற்றொரு மிதவேகப்பந்து கோலியின் நடு ஸ்டம்பை தகர்த்தது! ஸ்கோர் 79-4. என்னளவில், இது RCB சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி! 2 ஆண்டுகளுக்கு முன் ரொம்ப பேசப்பட்ட சௌரப் திவாரி, எப்போதும் போல சொதப்பி (17 of 16) த்ரிவேதியின் 4வது ஓவரில் Clean Bowled. அதே ஓவரில் வெட்டோரியும் அவுட்(Clean Bowled). த்ரிவேதி 4-0-25-4. 15 ஓவர் முடிவில், 105-6, தேவையான ரன்ரேட் 18.20. ஆமென்!

யோஹன் போத்தாவின் அடுத்த (16வது) ஓவரில், மொஹமத் கைஃப் அவுட்டானதும், போத்தா தனது மூக்கின் மேல் இருந்த வியர்வையை எடுத்து அவருக்கு “ப்ரோஷணம்” பண்ணி அனுப்பி வைத்த காட்சி நல்ல நகைச்சுவை ;-) அதே நேரம், அரங்கில் இருந்த சித்தார்த் மால்யா தலையை ஆட்டியபடி சோகமாக அமர்ந்திருந்ததும், ரசிக்கத் தக்கதாய் இருந்தது! அவருடன் இப்போதெல்லாம் தீபிகா படுகோனை காண முடிவதில்லை. ஒருவேளை தீபிகா கழட்டி விட்டிருப்பாரோ? அப்படியிருப்பின், தீபிகா தனது வாழ்வில் எடுத்த ஒரு சிறந்த முடிவு அது என்பதில் ஐயமில்லை :)

17வது ஓவரில் வினய்குமாரின் விக்கெட்டை எடுத்த அமித் சிங், அந்த ஓவரின் கடைசி பந்தில், ஒரு பவுண்டரி கொடுத்ததற்கு (அதுவும், 3 ஓவர்களில் 76 ரன்கள் தேவை என்ற சூழலில்) மிகவும் வருத்தப்பட்டு கொண்டது, ராஜஸ்தான் அணியின் Spirit-க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பாவம் முரளிதரன்! இத்தனை பேட்டிங் ஜாம்பவான்கள் உள்ள RCB அணியில் தான் பேட் பிடிக்க நேரிடும் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார்! முரளி 20வது ஓவரில் அவுட்டாகி, ராஜஸ்தான் 59 ரன்களில் பெருவெற்றியை பெற்றது! Rajasthan Royals had Warne as captain and now Rahul Dravid, 2 contrasting captains but inspiring leaders in their own way!

இப்படியாக, நிஜமான ராயல்கள் போலி ராயல் அணியை (அணியின் பெயரில் ராயலும், flamboyant ஓனரும், உலகமகா கிரிக்கெட்டர்களும் இருந்தால் மட்டும் போதுமா?! ) மண்ணைக் கவ்வ வைத்தனர்!

IPL5 - CSK vs PW -சிங்கத்தை அடக்கிய ராயல் பெங்கால் புலி


ஆட்டத்தை பற்றிச் சொல்ல பெரிதாக எதுவுமில்லை! முதல் பேட்டிங் என்ற தோனியின் தேர்வு சரியான ஒன்றே. சென்னையின் பேட்டிங் பலத்தை வைத்துப் பார்த்தால், புனே ஆடுகளத்தில் குறைந்தபட்சம் 170 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், கேப்டன் தோனியின் சொதப்பல் பேட்டிங்கால் (19 ஓவர்கள் முடியும் வரை கழுத்தறுத்து 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த கேவலத்தால்!), ஜடேஜா அற்புதமாக ஆடியும் (44 of 26) சென்னை எடுத்த மொத்த ஸ்கோர் 155 ரன்களே!

டுபிளஸ்ஸி ஆட்டம் எப்போதும் போல சிறப்பு! மொ.க விஜய் குறித்து சொல்ல ஒன்றுமில்லை. அடுத்த ஆட்டத்தில், அனிருத்தா இடம் பெற்றால் நல்லது. தோனி, முதலில் ஆடினாலும், இலக்கு நோக்கி ஆடினாலும், கடைசி 2-3 ஓவர்களில் விளாசி சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுதல் நலம் பயக்கும்! 14 ஓவர்கள் முடிவில் 106-3 (மார்க்கல், பிரேவோ வெயிட்டிங்!).. என்ற நிலையில், 7 விக்கெட்டுகள் இருந்த சூழலில், சென்னை அணி இறுதி 6 ஓவர்களில் எடுத்தது 49 ரன்கள் மட்டுமே! எதிரணியில், ரைடர், உத்தப்பா, ஸ்மித், சாமுவேல்ஸ் என்று பலமான மட்டையாளர்கள் இருக்கையில், 155 எடுத்த சென்னை வெளங்காம போறதுக்கு சாத்தியங்கள் அதிகம்!

புனே முதல் 6 ஓவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டதில் ஸ்கோர் 56-1. 15 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 106-3 (சென்னை 14 ஓவர்களில் இருந்த அதே நிலை!) (Req.RR 10). ஒரு fighting finish என்ற அளவுக்கு ஆட்டம் இருந்ததற்கு அஷ்வின் மற்றும் ரைனாவின் சிறப்பான பந்து வீச்சே காரணம். ரைடர் 58 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். அடிதடி ஆட்டத்துக்கு அஞ்சாத ஸ்மித்தைப் பார்க்க பயமாக இருந்தது.

3 ஓவர்களில் 34 ரன்கள் என்ற நிலையில், எனக்கு பாழாப் போன நம்பிக்கை துளிர்த்தது :) ஆனால், ஸ்மித், அந்த முக்கியமான ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என்று 12 ரன்கள் சேர்த்தார், கடைசி 2 ஓவர்களில் ஒன்றை மார்க்கலோ, மகேஷோ வீச வேண்டி இருந்ததாலும், ஸ்மித் முகத்தில் தெரிந்த கொலவெறியாலும், என் நம்பிக்கை புஸ்ஸாகியது. அப்புறம் என்னத்தை சொல்ல! ஸ்மித், 19 ஓவரில் 2 பவுண்டரிகளும், மகேஷின் 20வது ஓவரின் முதல் 2 பந்துகளில் 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் விளாசியதில், புனே 19.2 ஓவர்களில் ஒரு அப்செட் வெற்றி. அதோடு, தாதா தான் (இன்னும்)ஒரு சிறந்த கேப்டன் தான் என்பதையும் இந்த வெற்றி மூலம் பிரகடனப்படுத்தினார்!

Friday, April 13, 2012

IPL5 CSK vs RCB - சிங்க கர்ஜனையில் சிதறிய ராயல்




இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற CSK-RCB ஆட்டத்தின் முதல் இன்னிங்க்ஸை வேலை காரணமாக டிவியில் பார்க்க இயலவில்லை. அதுவும் நல்லதுக்கு தான். கிரிக் இன்ஃபோ தளத்தில் RCB ஸ்கோர் எகிறிக் கொண்டிருந்தது! கெய்லை டம்மியாக்கி விட்டு ஊர் பேர் தெரியாத அகர்வால் சென்னை பந்து வீச்சை விளாசித் தள்ளினார். அவர் அவுட்டானபோது ஸ்கோர் 53 (5.2). அகர்வால் எடுத்தது 45, கெய்ல் 7. அஷ்வின் பந்து வீச்சு இப்படி துவைத்து எடுக்கப்பட்டு பார்த்ததில்லை. 3 ஓவர்களில் 34 ரன்கள் தாரை வார்த்திருந்தார்.

அகர்வால் சென்ற பின், கெய்லுக்கு கொல வெறி பிடித்து, ரெய்னாவின் ஒரு ஓவரில் 21 ரன்கள். 9 ஓவர்களில் 90 ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு. கோலிக்கும் சீக்கிரம் வெறி பிடிக்கும் சாத்தியக்கூறுகள் தெரிந்தன :) ஒரு வழியாக கெய்லின் பேயாட்டம் ஓய்ந்தபோது ஸ்கோர் 162/2 (16.2). இந்த ரன் மழையிலும், பிரேவோவும் மார்க்கலும் நன்றாகவே பந்து வீசினார். பாலிங்கர் வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்ததில் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. ஒரு 10-12 ரன்கள் காப்பாற்றப் பட்டதாக கொள்ளலாம். பங்களூர் மொத்த ஸ்கோர் 205.

நிச்சயம் சென்னைக்கு தோல்வி என்ற முடிவோடு (அப்ப தான் வழக்கமான நம்ம ரென்ஷன் இல்லாம பார்க்க முடியும்!) டிவி பார்க்க ஆரம்பித்தேன். நிதானமாக தொடங்கிய டுபிளஸ்ஸி ஆட்டம் களை கட்ட ஆரம்பித்தது. உருப்படாத மொ.க முரளி விஜய் மொக்கை போட்டு 11 ரன்களில் அவுட்டானதும் நல்லதுக்கு தான். அடுத்து வந்த சென்னையின் Man for all seasons, ரெய்னா (23 of 14) அவுட்டானபோது ஸ்கோர் 88 (10.3). தோல்வியை எதிர்பார்த்து, ரிலேக்ஸ்டாக ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

தோனி 2 டவுன் களமிறங்கியது நல்ல மூவ்! தோனி 7-8 "ஹெலிகாப்டர்கள்" விட்டாலொழிய ஜெயிக்க வாய்ப்பே கிடையாது! அருமையாக ஆடி, 46 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த டுபிளஸ்ஸி 15வது ஓவரில் அவுட்டானபோது RR 14.2. முரளி தனது அற்புதமான ஸ்பெல்லில் 21 ரன்களே கொடுத்து விழுந்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிட வேண்டியது. அந்த சூழலில், வெற்றிக்கு வாய்ப்பு 30% என்று சொல்லும்படி தான் இருந்தது.

தோனியின் “ஹெலிகாப்டர்கள்” சரியாக பறக்காததால், தேவையான ரன்ரேட் ஏறுமுகமாகவே இருந்தது. கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவை (RR 16.66). சென்னை வெற்றி பெறும் என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பு இல்லாததால், ஒருத்தருக்கும் (அரங்கில் பார்வையாளர்கள், சென்னை அணி) டென்ஷன் இல்லாத மாதிரி நான் உணர்ந்தேன்! அந்த 18வது ஓவரில், சாகீரின் அனுபவம் மிளிர்ந்தது. 7-ஏ ரன்கள் கொடுத்து, ஓவரின் கடைசி பந்தில், தோனியின் கடைசி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினார். இறுதி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில் வெற்றி வாய்ப்பு 10% ஆனது!

உடல் நிலை சரியில்லாத கெய்ல் ஆடுகளத்தில் இல்லை. பத்கல் ஏற்கனவே துவைக்கப்படிருந்த (2 ஓவர்கள், 35 ரன்கள்) காரணத்தால், முக்கியமான 19வது ஓவரை வீச, வெட்டோரி பகுதி நேர பந்து வீச்சாளரான கோலியை அழைத்தது, தூங்கிக் கொண்டிருந்த (மார்க்கல்) சிங்கத்தை வாலைக்கடித்து எழுப்பிய கதையானது! 2 ஓசி பவுண்டரிகள் கிட்டியிருந்தாலும்,
மார்க்கல் அடித்த மற்ற 3 சிக்ஸர்கள் மிக “சுத்தமான” விளாசல்கள்! அந்த 28-ரன் ஓவர் கோபக்கார கோலிக்கு போதி மரம் போல! ஓவரின் முடிவில், “நல்லாத் தானே போயிட்டிருந்தது” வடிவேலுவை கோலி ஞாபகப்படுத்தினார் :) இனி, அடுத்த 5 ஆட்டங்களுக்கு, பந்து வீச கோலிக்கு கை வராது என்று நினைக்கிறேன்! பேட்டிகளில் சற்று லூசுத்தனமாக உளறும் சித்தார்த்த மால்யா சித்தபிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது!

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. ஒரு No Ball தவிர்த்து அந்த ஓவரை வினய் (அழுத்தத்திற்கு ஆளாகாமல்) சிறப்பாகவே வீசினார் என்பது என் கருத்து. மார்க்கல் விக்கெட் இழந்தும், முதல் 3 பந்துகளில் 12 ரன்கள்! 4வது ஒரு Dot Ball. 5வதில் ஒரு ரன் மட்டுமே! 6வது edge வாங்கி பவுண்டரிக்கு பறந்ததில், சென்னைக்கு ஐபிஎல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வெற்றி !!!! இப்படியாக ஆட்டத்தின் 37 ஓவர்களில் (பாலிங்கர் வீசிய கடைசி ஓவரையும், சென்னை பேட் செய்த கடைசி 2 ஓவர்களையும் தவிர்த்து) பின் தங்கியிருந்த சென்னை அணி ஓர் அசாதாரண வெற்றியைப் பெற்றது.

எ.அ.பாலா

Wednesday, April 11, 2012

IPL5 - மும்பை இந்தியன்ஸ் என்னும் ”தீவிரவாத” அணி


இது மும்பையின் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்துக்காக வைக்கப்பட்ட தலைப்பு அல்ல !!!




9th APR நடந்த மும்பை-டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் ஆட்டம் மிக மிக விறுவிறுப்பாக இருந்தது. ஐபிஎல்-5 இன் முதல் nail biter ஆட்டம் என்று தாராளமாக கூறலாம். முதலில் பேட் செய்த டெக்கான் அணி, சங்ககாரா விக்கெட் இழக்கும் வரை நல்ல நிலையில் தான் இருந்தது, 82-3 (12.3 ஓவர்கள்). சங்ககாரா அவுட் என்று அறிவிக்கப்படுவதற்கு முன் மும்பை அணி செய்த ரவுடித்தனத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை! சங்ககாரா அவுட் இல்லை என்று 2 கள அம்பயர்களும் முடிவு செய்தபிறகு, முனஃப் படேலும், திமிர் பிடித்த, கேப்டன் ஆகியும் திருந்தாத ஜென்மமான, ஹர்பஜனும், நம்ம ஊர் ரவுடி தினேஷ் கார்த்திக்கும், இன்னும் ஓரிரு மும்பை ஆட்டக்காரர்களும், அம்பயரை சூழ்ந்து கொண்டு பொறுக்கித்தனம் செய்ததில், மிரண்டு போன அம்பயர், தனது முடிவை, மூன்றாம் அம்பயருக்கு refer செய்யும் கட்டாயத்துக்கு ஆளானார்.

ஒரு விஷயத்தை 3-ஆம் அம்பயரிடம் refer செய்வதோ, செய்யாமல் இருப்பதோ, கள அம்பயர்களின் உரிமை என்பதை திமிர் பிடித்த முட்டாள் ஹர்பஜனும் அவனது மும்பை அணி ரவுடி கூட்டாளிகளும் புரிந்து கொள்ள வேண்டும்! ஹர்பஜனை கேப்டனாக நியமித்ததில், இனி மும்பை அணியில் இருக்கும் நல்ல குணமுள்ள வீரர்கள் கூட உருப்படாமல் போவதற்கு வாய்ப்பு மிக அதிகம். இந்த எல்லா கூத்தையும், தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, ஒரு சோஃபா முழுவதையும் தான் மட்டுமே ஆக்ரமித்து கொண்டு அமர்ந்திருந்த அம்பானியின் மகன், எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது இன்னொரு ஹைலைட் :-)


சரி மேட்சுக்கு வருவோம்! டெக்கான் 150-ஐ தாண்டும் என்று நினைத்தேன். ஆனால், இறுதி ஓவர்களில் மும்பை நன்றாக பந்து வீசியதில் அல்லது டெக்கானின் லோயர் ஆர்டர் சொதப்பியதில், டெக்கான் 138 ரன்களே எடுத்தது. பேட் செய்ய களமிறங்கிய மும்பை, அங்கிட் சர்மா (சுழல் பந்து வீச்சு) மற்றும் டேல் ஸ்டெயினின் பந்து வீச்சில் பயங்கரமாகத் தடுமாறியது. ஸ்டெயின் தான் ஏன் உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர் என்பதை இன்னிங்க்ஸின் 4வது ஓவரில் நிரூபித்தார்!! It was easily the best over of IPL-5 (according to me, of all IPLs!). லெவியை செட்டப் பண்ணி அல்லது ”பதப்படுத்தி”, அந்த அருமையான ஓவரின் கடைசிப்பந்தில், ஒரு 150 கிமீ யார்க்கர் வாயிலாக லெவியின் நடு ஸ்டம்பை தகர்த்தார் ஸ்டெயின். 5 ஓவர்களில் மும்பை 15-2.

120 கிமீ வேகத்தில் பந்து வீசி, முனஃப் படேல் போன்ற கவைக்குதவாதவர்கள் எல்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, ஸ்டெயின் போன்ற அற்புதமான பந்து வீச்சாளர்கள் பரிமளிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, அவர்கள் பரிமளித்தால் தான் கிரிக்கெட்டுக்கும் சிறப்பு! ராயுடுவும், ரோஹித்தும் தாக்கு பிடித்து, ஸ்கோரை 11.2 ஓவர்களில் 58க்கு இட்டு வந்தனர். ராயுடு அவுட்! கடைசி 3.4 ஓவர்களில் (போலார்ட் அவுட்டானபோது) மும்பைக்கு தேவை 44 ரன்கள்.

ஸ்டெயினுக்கு ஒரு ஓவர் இருந்த சூழலில், நிச்சயம் டெக்கான் ஜெயிக்கும் என்று தோன்றியது. ஸ்டெயின் வீசிய 19வது ஓவரும் ஒரு ஜெம், 5 ரன்கள் தந்து கார்த்திக்கையும் வீட்டுக்கு அனுப்பினார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், டேன் கிரிஸ்டியனின் மிக மிக மோசமான பந்து வீச்சால் (மட்டுமே!) மும்பை ஜெயித்தது! அவரது மூஞ்சியில் அல்லது முகரைக்கட்டையில் (உதட்டை சுழித்து பண்ணிய கோணங்கித்தனத்தில்) அப்பட்டமாக பிரஷர் தெரிந்தது! He did not look international class yesterday! He bowled that last over so pathetically! மேலும், ஓவரின் 5-வது பந்தில் ரோஹித் ரன் அவுட் (அவரது மட்டை தரையில் இல்லை) என்பது என் கருத்து. அந்த ஓவரில் ரோஹித் பெரிதாக கிழித்ததாகக் கூற எதுவுமில்லை. அதற்காக அவரது நேற்றைய ஆட்டமே தண்டம் என்று கூறுவதாகவும் எண்ண வேண்டியதில்லை!

ரோஹித் இது போலவே, இந்தியாவுக்கு ஆடும்போதும் விளையாடி ஜெயித்துக் கொடுத்தால், அவருக்கு புண்ணியமாகப் போகும் !

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails